Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 375
- Reaction score
- 571
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 6
“என்கிட்ட என்னவெல்லாம் சண்டை போடணுமோ எல்லாத்தையும் யோசிச்சு வச்சுக்கோ தங்கம்….. “என்று அன்னக்கொடியின் அருகில் வந்து சொன்னான் ராஜன்.
‘என்ன சொல்கிறான் இவன் ….? என்று புரியாமல் ராஜனை பார்த்தாள் அவள்.
“என்ன புரியலையா …..?இன்னும் இரண்டு வாரத்தில் என் கூட தானே தங்க போற…..”
“அதுக்கு நான் ஒத்துக்கனும் சார்?
“ஒத்துக்காம என்னடி பண்ண போற ….”
“நான் என்னவோ பண்றேன் .உங்களுக்கு என்ன? இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத வேலை….இத்தனை வருஷம் சும்மா இருந்துட்டு இப்ப என்ன புதுசா…”
“சும்மா இருந்தேன்னு நீ பாத்தியா…..? ஓஹ் வெளிநாட்டுக்கு போனவன் உன்னை தூக்கி போட்டு போயிட்டேன் என்று நினைச்சியா….?ரொம்ப பேசுற.வாயை கொஞ்சம் குறைச்சுக்க. அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல….” என்றான் அவள் உதட்டின் மீது பார்வை நிலைக்க விட்டபடி.
“ஆமா இவர் பெரிய காதல் மன்னன் பாரு….”
“ஹேய் என்னடி உன் பிரச்சனை?
“நான் பெங்களூரை விட்டு வர மாட்டேன் அவ்வளவு தான்….”
“ஏன் புருஷன் கூட வந்து வாழ கசக்குதாடி உனக்கு? இன்னொரு வாட்டி என் கூட வரமாட்டேன் என்று சொல்லி பாரு அப்ப தெரியும்…..” என்று கோபத்துடன் இரைந்தான் .
இங்கு இப்படி இருக்க மறுபக்கம் அன்னக்கொடியின் வீடு இருக்கும் அந்த தெருவுக்கு வந்து சேர்ந்தார் நவநீதமணி. தெருவுக்குள் நுழையும் போது பழைய நினைவுகள் பலவும் வந்து தொல்லை செய்தது அவரை.
எவ்வளவு மகிழ்ச்சியோடு இந்த தெருவில் எல்லோருடனும் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்ற யோசனையும் நினைவுகளும் கட்டுக்கடங்காமல் வந்து அவரை அலைக்கழித்தது என்பது தான் உண்மை.
உழைப்பிற்கும் ,நேர்மைக்கும் பேர்போன சண்முகத்தின் மளிகை கடைக்கு பக்கத்தில் புதிதாக இப்போது ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு காத்திருப்பதை சரியாக கண்டு கொண்டார்.
“பரவாயில்லை தேனாம்பாள் ரொம்ப நல்லா வந்துட்டா . வைதேகி அம்மா நிலத்தை வித்து மகன் குடும்பத்தை நல்ல உயரத்தில் கொண்டு வந்தது வாழ வச்சிருக்காங்க…..”என்று கூட வந்தவர்களிடம் சொல்லி வைத்தார்.
“அக்கா நீ கிளம்பி வந்த வேகத்தை பாத்து சண்முகம் அண்ணாச்சி சட்டையை பிடித்து சண்டை போடுவீங்க என்று நினைச்சேன்…..” என்றான் ஒருவன்.
“அட சும்மா இரு குமார்.அவங்களே இன்னைக்கு தான் புது வீடு கட்டி குடி போறாங்க.இப்ப போய் சண்டை போட முடியுமா….?புது வீடு ரொம்ப நல்லா இருக்கு பாத்தியா….”சொல்லியபடி அன்னக்கொடி எங்கேயாவது தெரிகிறாளா என்று தலையை அங்குமிங்கும் ஆட்டி புது வீட்டை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
“என்னவோ போக்கா நீ பண்றது ஒண்ணுமே புரியல…..”என்றார் கூட வந்த உறவுக்கார பெண் ஒருவர்
புது வீட்டு கொண்டாட்டத்துக்கு தங்களுக்கு பத்திரிக்கை வைக்கவில்லை என்று நவநீத மணிக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. வீட்டின் வெளி தோற்றம் அத்தனை அழகாய் இருக்க உள்ளே சென்று பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் அவருக்கு.
‘தியாகு எப்படியும் வீட்டுக்குள்ள போட்டோ பிடிச்சிட்டு வருவான்.அப்புறமா அதை பாத்துப்போம் …’என்று தனக்குத் தானே சமாதானமாக சொல்லிக் கொண்டார்.
“என்னக்கா அதிசயமா நம்ம தெருவுக்கு வந்திருக்க….? என்று வந்தார் அந்தத் தெருவில் டிபன் கடை வைத்திருக்கும் முருகப்பன் அண்ணாச்சி.
“ஏன் நான் வரக்கூடாதா என்ன? நானும் இதே தெருவில பத்து வருடம் குடியிருந்தவ தான் தெரியாது உனக்கு?
“நீங்க எல்லாம் தெற்கு தெருவில் பங்களா வச்சிருக்கிற பெரும் பணக்காரங்களாச்சே .இது எல்லாவித மக்களும் ஒத்துமையா வாழுற வடக்கு தெரு.இங்க வந்தா உங்களுக்கு ஒத்துக்குமோ என்னமோ….”
“என்னடா என்கிட்டயே நான் சொன்னதெல்லாம் திருப்பி சொல்றியா?
“இல்லக்கா அதிசயமா வராதவங்க வந்திருக்கீங்க அது தான்….ஆமா இங்க எல்லாம் வரமாட்டீங்களே என்ன விஷயம்?
“ஒன்னும் இல்ல சும்மா தான்…..” என்று சொல்லியபடி பட்டுப் புடவை முந்தானையை உதறி செருகிக்கொண்டு திரும்பி வீட்டுக்கு நடந்தார் நவநீதம்.
தான் இப்போது கட்டியிருக்கும் இந்த புடவைக்கும் ,முன்பு இந்த தெருவில் வசிக்கும் போது கட்டியிருந்த புடவைக்கும் எத்தனை வித்தியாசம் என்ற யோசனையுடன் நடந்து கொண்டிருந்தார் அவர்.அப்போதெல்லாம் கணவரின் இருபதாயிரம் சம்பளத்தில் எத்தனை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோம் என்ற எண்ணம் மட்டும் தான் அவர் தலையில் ஓடிக்கொண்டிருந்தது.
இரண்டு மகன்களும் சொல்லாமல் கொள்ளாமல் அன்னக்கொடி வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கிளம்பி போய் விட்டார்கள் என்று பெரும் கோபத்துடன் கிளம்பி வந்த நவநீதம் ,இப்போது எதுவும் பேசாமல் திரும்பி போவதை வேடிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த தெருவில் வசிப்பவர்கள்.
அத்தனை கோபத்தோடு கிளம்பி வந்தவர் மனம் அந்த தெருவுக்கு வந்ததும் சட்டென்று எப்படி மாறியது என்று அவருக்கு சொல்ல தெரியவில்லை.அதுவும் அன்னக்கொடியின் பெரிய வீட்டை காண அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.அதை விட சற்று தள்ளி கட்டியிருந்த சூப்பர் மார்க்கெட்டை பார்த்ததும் பேச்சு வரவில்லை அவருக்கு.
தனக்கு என்ன ஆனது என்ற யோசனையோடு வீட்டை நோக்கி நடந்து வந்த மனைவியை தான் பார்த்துக் கொண்டிருந்தார் மோகனசுந்தரம்.
“என்ன அங்க சண்முகம் வீட்டுக்கு போய் சண்டை போட்டுட்டு வரியா??
“அதெல்லாம் இல்லைங்க…..”என்றார் தலை குனிந்தபடி.
“இல்ல…..உன் பேச்சு சரியில்லை. என்ன பண்ணிட்டு வந்திருக்க...?குரலை உயர்த்தினார் கணவர்.
“இல்ல இல்ல... நான் ஒன்னும் பண்ணல….. நம்புங்க”என்று சொன்ன மனைவியின் குரலில் என்ன இருந்தது என்று மோகன சுந்தரத்திற்கு புரியவில்லை.
“என்னாச்சு?எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சிருக்க…..?
“ தேனாம்பாள் பெரிய வீடு கட்டி இன்னைக்கு குடி போயிருக்கா. பார்த்ததும் மனசு நிறைஞ்சு போச்சு.அதுக்கு பக்கத்துல ஒரு சூப்பர் மார்க்கெட்டும் கட்டி இருக்காங்க .பெங்களூரில் இருந்த வெத்து நிலத்தை நல்ல விலைக்கு வித்தருக்காங்க போல.மேலையும் கீழையும் சேர்த்து இரண்டு வீடு.ரெண்டு பொண்ணுங்களுக்கும் குடுப்பா போல…..”என்று சொல்லிக்கொண்டே போனார்.
“ஏய் அவங்க என்ன பண்ணா உனக்கென்ன ….?அந்த வீட்டுக்குள்ள போய் பார்க்கணும் போல இருக்கா …..? அந்த வீட்டில நீ எல்லாம் கால வச்ச அவங்க நல்லா இருக்க மாட்டாங்க.அந்த பக்கம் போயிடாத…..” கோபத்துடன் வந்தது கணவன் குரல்.
“என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க…..?சண்முகம் அண்ணாச்சியும் தேனாம்பாளும் நல்லா இருக்கணும் என்று நான் நினைக்கமாட்டேனா நான் என்ன அவ்வளவு பொல்லாதவளா…..?
“யாரு நினைக்கிறது நீயா ….?அப்படி நினைக்கிறவ தான் உன் பையன் அன்னம் கழுத்தில் கட்டின தாலியை கழட்டி எடுத்துட்டு வீட்டுக்கு கொண்டு வந்தியா என்ன? நீயெல்லாம் ஒரு பொம்பிளையாடி…..?
“இல்லைங்க……”என்று தடுமாறினார் நவநீதம்.
“இத்தன வருஷம் கழிச்சு அந்த தெருவுக்கு போனதும் என்னமோ போல ஆயிடுச்சுங்க…..” இன்று குரல் தழுதழுக்க சொன்ன மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்தார் கணவர்.
“என்னாச்சு உனக்கு இன்னைக்கு.? சொல்லியபடி மனைவிக்கு அருகில் வந்தார் மோகனசுந்தரம்.
“அந்த தெருவில எல்லோருக்கும் பத்திரிகை வச்சு கிரகப்பிரவேசம் கொண்டாடுறாங்க. இந்த பெரிய வீடு கட்டி இருக்கா …..நமக்கு ஒரு பத்திரிக்கை வைக்க தோணலையே அவங்களுக்கு.?
“நீ மட்டும் ஊரைக்கூட்டி பெரிய பையனுக்கு கல்யாணம் பண்றப்போ அவுங்களுக்கு பத்திரிக்கை வச்சியா என்ன? தியாகு கல்யாணம் முடிஞ்சதும் மண்டபத்திலிருந்து நேரா பொண்டாட்டிய கூட்டிட்டு போய் அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு தான் இந்த வீட்டுக்கு வந்தான்.நினைவிருக்கா உனக்கு?
“சின்ன பிள்ளைகளுக்கு இருக்கிற புத்தி உனக்கு இல்லாம போயிடுச்சு.ஊருக்குள்ள பெரிய மனுஷின்னு சொல்லிட்டு இருந்தா பத்தாது.பெரிய மனசோட நடந்துக்கணும்…..” கோபத்தோடு கத்திக் கொண்டே எழுந்து வெளியே போனார் மோகனசுந்தரம்.
இத்தனை வருடங்களாக தன்னிடம் பேசாமல் இருந்த கணவன் இன்றைக்கு அந்த தெருவுக்குப் போய் வந்ததும் சண்டை போடவேனும் முகம் பார்த்து பேசினாரே என்று நினைத்ததும் தன்னை அறியாமல் கண்ணீர் பெருகியது நவநீதமணிக்கு.
அழைக்காமலேயே அந்த வீட்டுக்கு போய் நின்ற தன் இரண்டு மகன்கள் மீதும் இப்போது கோபம் இல்லை . அவர்களாவது பழைய உறவை மறக்கவில்லை என்று பெருமையாக இருந்தது.
மருமகள் சுகந்தி தன்னையே பார்ப்பதை கண்டு கொள்ளாமல் கணவன் தன்னுடன் பேசி விட்ட மகிழ்ச்சியோடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார் நவநீத மணி.
'இவங்க பண்ணுறதை புரிஞ்சுக்கவே முடியல….' என்ற யோசனையுடன் நின்றிருந்தாள் சுகந்தி.
தொடரும்...........
Last edited:
Previous thread
Next thread