• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

EK Final

அத்தியாயம் 33

அவர்கள் வீட்டை விட்டுச் சென்றதும், அத்தனை நேரப் பரபரப்பும் அடங்கி அந்த வீடே சட்டென்று ஓய்ந்தது போலானது. நடராஜன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, "மித்ரன்... போய் அந்தக் கதவைத் திறந்துவிடுப்பா. வந்தவங்களுக்கு அம்மாவைச் சாப்பாடு பரிமாறச் சொல்லு" என்றார் தன் மித்ரனிடம்.

ரிதன்யாவிடமிருந்து முழுதாக விடுபட்ட உணர்வுடன் சகாயன் ஒருவித பூரணத்துவத்துடன் அங்கே நின்றிருந்தான்.

அங்கே அறைக்குள் இருந்த பெண்களின் தலைகள் மட்டும்தான் உள்ளே இருந்ததே தவிர, அவர்களின் காதுகள் எல்லாம் வெளியே நடக்கும் பேச்சுகளில்தான் நிலைத்திருந்தன. நடராஜனின் குரல் கேட்டதும், மித்ரன் கதவைத் திறப்பதற்காகத்தான் அவர்கள் காத்திருந்தார்கள் போலும்! மித்ரன் வந்து வெளிப்புறப் பூட்டைத் திறந்து கதவை அகலமாகத் திறந்தவுடன், முதலில் வெளியே வந்தாள் ஆனந்தி அம்மாள். அவரின் பின்னாலேயே பூங்குழலி, மித்ரா, யாழினி என வரிசையாக வர... நறுமுகையை மட்டும் இன்னும் காணவில்லை.

அப்பொழுது மித்ரன் மெதுவாகச் சகாயனின் இடுப்பில் கிள்ளி, "பிரச்சினை எல்லாம் ஒருவழியா முடிஞ்சாச்சு அண்ணா... இப்போ மெதுவா உள்ளே போயி அண்ணிக்கிட்ட அந்த ஆர்.ஜே. மித்ரன் மேட்டருக்கு வாங்கப் போற அடியைச் சமாளிக்கிற வழியைப் பாரு!" என்று ரகசியமாகக் காதருகே வம்பு இழுத்தான்.

சகாயன் அவனைக் கண் உருட்டி மிரட்டிவிட்டு, மெதுவாகத் தன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே கட்டிலின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த நறுமுகை, சகாயனைக் கண்டதும் தன் விழிகளைச் சுருக்கிப் பலமாக முறைத்தாள்.

அவளருகே நெருங்கிச் சென்று அமர்ந்த சகாயன், அவளது குளுமையான கரங்களை மெதுவாகத் தன் கைகளுக்குள் பற்றிக் கொண்டான். பின், அவளது முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான்.

நறுமுகை தன் கலங்கிய கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்து, "நீங்க... நீங்கதான் உண்மையாகவே அந்த ஆர்.ஜே. மித்ரனா? ஏன் என்கிட்ட இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சீங்க?" என்று செல்லக் கோபத்தோடு அவனது அகன்ற மார்பில் தன் பிஞ்சுக்கைகளால் குத்தினாள்.

சகாயன் அவளது கைகளைப் பிடித்துத் தடுத்து, அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். "சொன்னேனேடி... உனக்கு என்னை அந்த ஆர்.ஜே வா பிடிச்சு காதலிக்கிறதை விட, இந்தச் சகாயனாப் பிடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான் மறைச்சேன். இப்போ சொல்லு... உனக்கு அந்த ஆர்.ஜே வைத்தான் பிடிக்குமா, இல்லை அவனோட குரலுக்குப் பின்னாடி இருக்குற இந்தச் சகாயனைப் பிடிக்குமா?" என்று அவளது காதோரம் தன் காந்தக் குரலில் ரகசியமாய் வினவினான்.

அவனது நெஞ்சின் சூட்டில் தன் வெட்கத்தை மறைத்துக் கொண்ட நறுமுகை, "எனக்கு இந்தச் சகாயன் மட்டும்தான் வேணும்..." என்றவள், சற்றுத் தயங்கி, "ஆனா... அந்த ரிதன்யாவும் பாவம் தானேங்க?" என்று சொல்லியபடி அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

"நான் தெரிஞ்சு செய்த பிழைடி இது... அவளுக்கும் அவளுக்குப் பிடிச்சவன் வாழ்க்கையில வந்தாத்தான் என் மனசுல இருக்குற இந்தக் குற்றக் குறுகுறுப்பு முழுசாப் போகும்" என்றான் அவனும் தன் கடந்த கால நினைவுகளின் ஆழமான குரலில்.

நறுமுகை அவனையே அமைதியாகப் பார்க்க, சகாயன் லேசான பெருமூச்சோடு அவளது கைகளைத் தன் விரல்களால் வருடியபடி, "நான் அவளோட காதலனா இருக்கும் பொழுது எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வரலை நறுமுகை. ஆனால், என் குடும்பத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தின பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சினைகள் ஆரம்பிச்சது. நான் என் சுயநலத்தை மட்டும் பார்த்து அவளைக் கல்யாணம் பண்ணியிருந்தால், இன்னைக்கு எனக்குக் குடும்ப உறவுகள்னு சொல்லிக்க ஒருத்தரும் இருந்திருக்க மாட்டாங்க. இதுவும் ஒருவகையில சுயநலம் என்றாலும்... கல்யாணத்துக்கு முன்னாடியே அவளோட பணத்திமிரும் பேச்சும் நம்ம குடும்பத்தையே காயப்படுத்தியப்போதான், அவளை என் மனசை விட்டு நான் முழுசாத் தூக்கி எறிஞ்சேன்.

என் குடும்பத்தை மதிக்காத, என் தன்மானத்தைப் பெருசா நினைக்காத ஒருத்தியோட என்னால வாழ முடியாதுடி. ஆனா, அன்னைக்குச் சூழ்நிலையால உன் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும்... இப்போ உன்னை என் உசுரா ஏத்துக்கிட்டது நான் முழு மனசோட எடுத்த முடிவு. என் வாழ்க்கையில இனி நீ மட்டும்தான்!" என்றான் அவளது கண்களை நேராக நோக்கி அத்தனை உறுதியாக.

அவன் அதிகம் பேசவில்லை என்றாலும், அவனது குரலில் இருந்த உண்மையும் காதலும் நறுமுகைக்குப் புரிந்தது. அவளது முகம் நிம்மதியில் மலர, அவனது நெஞ்சில் இன்னும் நெருக்கமாகச் சாய்ந்து கொண்டாள்.

அவளது வயிற்றில் வளரும் அந்தப் பிஞ்சு உயிரும் அவர்களின் காதலை ஆமோதிப்பது போல அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

"இதுதான்டி எனக்கு வேணும்..." என்றவனின் கைகள் மெதுவாக அவளது இடுப்பில் ஊரத் தொடங்க... தன் இடுப்பில் படர்ந்த அவனது கையைத் தடுத்து நிறுத்தியபடி, "பசிக்குது... முதல்ல சாப்பிடப் போகலாம் வாங்க" என்றாள் நறுமுகை பேச்சை மாற்றி.

தனக்கு அவள் யாருக்கும் சொல்லாமல் எழுதிய கடிதங்களை அத்தனை பேர் முன்னிலையிலும் காட்டியதால், "உன் கடிதத்தையெல்லாம் எல்லாரும் பார்க்கிற மாதிரி காட்டிட்டேனே... அதனால என் மேல் உனக்குக் கோபம் ஒன்றும் இல்லையேடி?" என்று சகாயன் மெதுவாகக் கேட்டான்.

"நான் உங்களைக் கொஞ்சிக் கொஞ்சியா அதுல எழுதியிருந்தேன்? மற்றவங்க பார்த்தால் தப்பாப் பேசுறதுக்கு அதுல ஒன்னுமில்லைதானே... அப்புறம் என்ன?" என்றாள் எதார்த்தமாக.

"ஏன்... மாமாவும் மாமியும் இதைப் பத்திப் பேசமாட்டாங்களா?"என்று புருவத்தை தூக்கி வினாவ,

"என் அப்பாவுக்கும் அக்காவுக்கும் இது ஏற்கனவே தெரியும். அக்காவோட கல்யாண நாள் கிட்ட நெருங்கினதால, அந்தப் பிறந்தநாள் வாழ்த்துக் கார்டை அப்பாகிட்டத்தான் போஸ்ட் பண்ணக் கொடுத்தேன். அப்பாவும் உனக்கு வேற வேலைக்கழுதையில்லையா என்று என்னைத் திட்டிட்டு வேண்டிட்டுப்போனார்." என்று அவள் அத்தனை சாதாரணமாகச் சொல்ல...

"அடி பாவி!" என்று அதிர்ச்சியில் தன் வாயில் கையை வைத்தவனைப் பார்த்து நறுமுகை கலகலவெனச் சிரித்தாள்.

"நான் உங்க மேல க்ரஷ் வச்சிருந்தேன் தான்... அதுக்காக முகம் தெரியாத ஒருத்தனிடம் என் வாழ்க்கையைத் தூக்கிக் கொடுக்க நான் ஒன்றும் ஏமாளி இல்லை!" என்றாள் தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடி.

"இப்ப மட்டும் என்னவாம்... தூக்கிக் கொடுத்திட்டாய் தானே? அப்போ நீயும் ஏமாளிதான் போல!" என்று சகாயன் தன் நமட்டுச் சிரிப்புடன் அவளை வம்புக்கு இழுக்க,

"நான் என் வாழ்க்கையை என் புருஷன் சகாயனிடம் மட்டும்தான் கொடுத்திருக்கேன். இருந்தாலும்... நீங்கதான் அந்த ஆர்.ஜே. மித்ரன்னு தெரிஞ்சதும் உள்ளே ஏதோ ஒரு கிளுகிளுப்பாத்தான் இருக்கு. நாளைக்கு உண்மையிலேயே என்னை ரேடியோ ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?" என்று குழந்தை போன்று ஆர்வமாகக் கேட்டாள்.

"கண்டிப்பா போவோம்டி..." என்றான் சகாயனும் அவளது ஆர்வத்தைக் கண்டு புன்னகையுடன்.

"ஐ ஜாலி! நானும் என் பிள்ளையும் அவங்க அப்பா ரேடியோவில் பேசுறதை நேர்ல பக்கத்துல இருந்து பார்க்கப் போறோம்" என்று தன் வயிற்றையும் மென்மையாகப் பிடித்துக் கொண்டு குதூகலமாகச் சொன்னாள்.

"சரிடி வா, முதல்ல சாப்பிடப் போவோம்... இப்போவே நம்ம ரெண்டு பேரையும் காணோம்னு வெளியே எல்லாரும் ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்க" என்று அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு ஹாலுக்குள் வெளியில் வந்தான்.

அவர்கள் வெளியில் வந்தவுடன், அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மித்ரன், இவர்களைப் பார்த்ததும், "என்ன அண்ணா... அடி பலமோ?!" என்று கண்ணைச் சிமிட்டிக் கிண்டல் பண்ணினான்.

"அவளுக்கு எங்கேடா கோபப்படத் தெரியும்? அவளுக்குக் கோபப்படத் தெரிஞ்சிருந்தா... அன்னைக்கு நான் திடீர்னு தாலி கட்டும் பொழுது பேசாமல் இருந்திருப்பாளா? பக்கத்துல இருந்த குத்துவிளக்கை எடுத்து என் நெஞ்சுல சொருகியிருக்க மாட்டாளா? அப்பவே அமைதியா சும்மா இருந்தவள்... இப்பவாடா என்கிட்டக் கோபப்படப் போறா?!" என்றான் சகாயன், நறுமுகையைக் காதலோடு அணைத்தபடி அத்தனை கம்பீரமாக!

அதை கேட்டு ரசித்துச் சிரித்த நடராஜன், "ஆமாடா... சகாயன் நறுமுகை உறவு மனுஷங்க சேர்த்து வச்சது இல்லை, அது கடவுள் பார்த்துப் பார்த்துப் பிணைச்சது!" என்று தன் நெஞ்சாரச் சொல்ல, அந்த இடமே ஒரு அழகான நிசப்தத்தில் அமிழ்ந்தது.

எத்தனையோ தடைகள், எத்தனையோ திருப்பங்கள், முகம் தெரியாத ஒரு குரலின் மீது கொண்ட ஈர்ப்பு... அத்தனையையும் தாண்டி, இன்று ஒரே கூரையின் கீழ் தங்களின் வாரிசைச் சுமக்கும் தம்பதிகளாக அவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது, அது நிஜமாகவே கடவுள் எழுதிய காவியமாகத்தான் இருந்தது.

சகாயன் காதலோடு நறுமுகையின் தோள்களை அணைத்துக் கொள்ள, அவளோ தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்தபடி, தன் வயிற்றில் வளரும் அந்தப் பிஞ்சு உயிரைத் தொட்டுத் தடவினாள்.

அவர்களின் வாழ்க்கையும் இனி என்றும் வற்றாத, அந்த எண்ணிலடங்காக் காதலுடன் பேரன்போடும் மலரத் தயாரானது!

முற்றுப் பெற்றது
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Previous thread

Latest threads

Back
Top Bottom