Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 375
- Reaction score
- 571
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 5
“அத்தை நான் கோயம்புத்தூரில் புதுசா ஆபீஸ் திறக்க போறேன்.நாளைக்கு அங்க கிளம்புறேன்.தங்கத்தையும் என் கூட அனுப்பி வச்சுடுங்க….”
திடுக்கிட்டு போய் அவனை பார்த்தாள் அன்னம்.
“என்ன பார்வை….?என்று அவளை பார்த்து கண் சிமிட்டினான் அவன்.
“அவளுக்கு பெங்களூர்ல தானே வேலை…..”என்று தயங்கியபடி சொன்னார் சண்முகம் .
தங்கையின் திருமண வாழ்க்கையை சரியாக்க பார்க்காமல் அவள் வேலை பற்றி இப்போது பேச வேண்டுமா என்று தந்தையை முறைத்து பார்த்தாள் பூங்கொடி.
“இன்னும் இரண்டு வாரத்தில் என் பொண்டாட்டிய டிரான்ஸ்பர் பண்ணிடுவாங்க.இங்க அந்த கம்பெனியில் வேலை பாத்த பொண்ணு கல்யாணம் முடிஞ்சு பெங்களூருக்கு மாறி போறாங்க. அதனால அங்க இருக்கிற ஒரு ஆளை இங்க கோயம்புத்தூருக்கு மாத்துறாங்க.எல்லாம் ஏற்கனவே பேசிட்டேன். இன்னைக்கு இவளுக்கு மெயில் பண்ணுவாங்க….”என்று மனைவியை கட்டினான்.
“இது எப்ப…..? என்றான் ஆச்சரியத்துடன் கேட்டான் கேசவன்.
“எல்லாம் அவங்க பேசிக்கட்டும் நீ சும்மா இருடா….”என்று கேசவனிடம் பார்த்து சொன்னாள் பூங்கொடி.
“ஆபீசுக்கு பக்கத்தில் வீடு பாத்திருக்கேன்.நம்ம புது ஆபீஸ் ஐந்தாம் மாடி.தங்கத்தோட ஆபிஸ் இரண்டாவது மடில இருக்கு.ஒரே பில்டிங் தான்.அதனால நாங்க வேலைக்கு போய் வர ஈசியா இருக்கும்…..”
எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு பேசுபவனை தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“இவ்வளவெல்லாம் யோசிச்சு செய்திருக்கிறியேப்பா ….ஆனா உங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோ….? என்று வாயை திறந்தார் பாட்டி
“அவங்க என்ன சொல்ல போறாங்க பாட்டி …..? நான் வீடு பார்த்து என் பொண்டாட்டிய கூட்டிட்டு போனா அவங்களுக்கு என்ன பிரச்சனை?
“இத்தனை நடந்த பிறகு பெரியவங்க பேசி ஒரு முடிவுக்கு வராமல் எப்படி பெண்ணை அனுப்ப…..? தயக்கமாக சொன்னார் சண்முகம்
“ஏன் மாமா என்னை நம்பி என் பொண்டாட்டிய அனுப்ப மாட்டிங்களா?
“இத்தனை வருஷம் அன்னம் எப்படி இருக்கா…? என்ன பண்றா என்று பார்க்காமல் இருந்துட்டு திடீர்னு பொண்டாட்டிய கூட அனுப்ப சொன்னா அவங்களும் தான் என்ன பண்ணுவாங்க….? என்று குறுக்கே வந்தாள் மீனா.
“எதுவும் தெரிஞ்சுக்கலைன்னு உனக்கு தெரியுமா மீனா….? தினமும் உன் பிரண்டுக்கு போன் பண்ணேன்.மெசேஜ் கூட அனுப்பிட்டு தான் இருக்கேன். ஒரு நாளாவது எனக்கு ரிப்ளை பண்ண தோணிச்சா அவளுக்கு ? அவ கிட்ட கேளு…..?
கோபத்துடன் கணவனை முறைத்தாள் அன்னக்கொடி.
“அடிப்பாவி ஒரு நாளாவது ஏதாவது சொன்னியாடி…..? தோழியை பார்த்தாள் மீனா.
மீனாவுக்கு பதில் சொல்லாமல் சட்டென்று தலை குனிந்து கொண்டாள் அன்னக்கொடி.
“விளையாட்டில்ல தியாகு …..இதெல்லாம் உங்கம்மாக்கு தெரிஞ்சா ஒரு பஞ்சாயத்தை கூட்டிடுவாங்க.இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமா? என்றார் அன்னத்தின் அன்னை தேனாம்பாள் .
“அவங்களுக்கு தெரியாது அத்தை.ராஜன் தன் பொண்டாட்டி கூட வாழ நினைக்கிறான்.அவனுக்கு உதவியா நானும் கூட இருக்கேன்…அவ்வளவுதான்….”
“பாருப்பா தியாகு ,நீயும் உன் தம்பியும் கூப்பிடாமலே நம்ம வீட்டுக்கு பெரிய மனசு பண்ணி வந்தது எங்களுக்கு சந்தோஷம் தான். ஆனா அன்னக்கொடி கழுத்துல திரும்ப தாலிய போட்டு அவளை கூட்டிட்டு போய் வாழ நினைக்கிறது எல்லாம் நீங்க இங்க ரெண்டு பேரும் மட்டும் முடிவெடுத்தா சரியா வருமா…? பெரியவங்க பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்தா சரியா இருக்கும். கொஞ்சம் அவசரப்படாமல் யோசிங்க என்று தான் சொல்றேன்……” என்று தன் மனதை சொன்னார் பாட்டி.
“பெரியவங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரணும் என்றால் நானும் உங்க பேத்தியும் தனித்தனியா தான் இருக்கணும் .அதுதான் வேணுமா உங்களுக்கு…..” என்று பாட்டியை முறைத்தான் வரதராஜன்
“இல்லப்பா ……வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த தன் பையனை புடிச்சு ரகசியமா கோயம்புத்தூருக்கு என் பொண்ணு கூட அனுப்பி வச்சிட்டதா நாளைக்கு ஒரு பேச்சு வந்துடக் கூடாது பாரு….”என்கிறார் சண்முகம்.
நிச்சயமாக தாய் நவநீதம் இப்படி சொல்லி வைப்பார் என்று ராஜனுக்கும் தியாகுவுக்கும் தெரியாதா என்ன.
நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பேசாமல் அக்காவின் பக்கத்தில் நின்றிருந்தாள் அன்னக்கொடி.
“தேவையில்லாத பிரச்சனையை இழுத்துக்க வேணாம் மாமா.அன்னம் பெங்களூரு கிளம்பி போகட்டும் .இரண்டு வாரம் இருக்கு தானே. அதுக்குள்ள வீட்ல அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லி கோயம்புத்தூரில் போய் செட்டில் ஆகுறதை பற்றி பார்க்கலாம்….”
“கோயம்புத்தூர் ஆபீஸ் திறக்கிற பங்ஷனுக்கு இரண்டு குடும்பம் அங்க வந்து நேரா பாத்துக்கட்டும் .அதுவரைக்கும் எல்லாரும் இப்படியே இருங்க....”என்று பொதுவில் சொன்னான் தியாகு.
“ தம்பி அன்னம் கழுத்துல தாலிய போட்டு விட்டிருக்கான் என்று எங்கம்மாவுக்கு இப்ப வரைக்கும் தெரியாமலா இருக்கும். இப்ப நாங்க வீட்டுக்கு போனதும் எங்க ரெண்டு பேர் கூடவும் சண்டைக்கு வருவாங்க தான்.அதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தா என் தம்பி வாழ்க்கையே எப்படி சரி பண்ண?
“இன்னும் மூணு மாசத்துல நானும் என் குடும்பமும் ஜெர்மனி கிளம்பி போயிடுவோம் .ஊர்ல இருக்க போறது தம்பியும் அன்னமும் தான்.
எத்தனை நாளைக்கு எல்லாரையும் பகைச்சிட்டு வாழ போறாங்க எங்கம்மா. ஒரு நாள் அவங்க எல்லாத்தையும் ஏத்துப்பாங்க தானே. அதுவரைக்கும் இவங்களும் கொஞ்சம் தள்ளி இருக்கிறது தான் நல்லது….” என்று சொல்லி வைத்தான் தியாகு.
“இன்னும் ரெண்டு வாரத்துல நான் வந்து உன்னை கோயம்புத்தூருக்கு கூட்டிட்டு வர்றேன் தங்கம்…..”என்று அன்னக்கொடியின் அருகில் வந்து சொன்னான் வரதராஜன் .
பதில் எதுவும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள் அவள்.
“உன்னோட டிரான்ஸ்பருக்கு வேண்டிய எல்லாம் ஏற்கனவே பார்த்துட்டேன் . இரண்டு வாரத்தில் நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் சரியா…”
“பாட்டியை தனியா விட்டுட்டு எப்படி கிளம்ப முடியும்.யாரை கேட்டு எனக்கு டிரான்ஸ்பருக்கு ஏற்பாடு பண்ணான் ராஸ்கல்…..” அன்னக்கொடி திட்டுவதை சரியாக கண்டு கொண்டான் கணவன்.
“பாட்டி கூட கேசவன் இருக்கிறான் தானே..அதோட ட்ரான்ஸ்பர் வேணுமா என்று ஆபிஸில ஏற்கனவே உன்கிட்ட கேட்டாங்க தானே?மீனாவும் பேப்பர் போட்டுட்டா.சீக்கிரம் அவளும் ஊருக்கு வந்துடுவா. நீ தனியா அங்க என்ன பண்ண போற?
தன் எண்ணம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு சட்டு சட்டென்று பதில் சொல்பவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னக்கொடி
இத்தனை வருடங்களாக தன் மகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தவன் திடீரென்று வந்து இப்படி எல்லாம் சொல்லவும் என்ன செய்வது என்று குழம்பி போனார்கள் அன்னக்கொடியின் பெற்றவர்கள் . மறுபக்கம் நவநீதம் இன்னும் என்னென்ன சொல்லி வைப்பாரோ என்ற பயம் வேறு அவர்களை ஆட்டிப்படைத்தது.
இனி வருவது எல்லாவற்றையும் ராஜன் சமாளித்துக் கொள்வான் என்று அவன் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்தது இப்போது.
எல்லோரும் ராஜனும் அன்னக்கொடியும் சேர்த்து வாழ வேண்டும் என்று தான் ஆசை கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அன்னக்கொடி புதிதாக எதையாவது இழுத்து வைப்பாளோ என்று பாட்டிக்கு திக் திக்கென்று இருந்தது.
“பெரிய வீட்டு நவநீதம்மா ஆளுகள கூட்டிட்டு இங்கதான் வந்துட்டு இருக்காங்க போல…..” என்று ஓடி உள்ளே வந்து சொன்னார் ஒருவர்.
“போச்சு….அந்தம்மா இன்னும் என்ன பண்ணி வைக்க போகுதோ தெரியல...”என்று முணுமுணுத்தார் சண்முகம்.
“இதுக்கு தான் நீங்க இங்க வந்தீங்களா….? உங்களை யாரு கூப்பிட்டது இங்க.எப்பவும் அன்னத்தை அழ வைக்கிற போல தான் எல்லாம் பண்ணி வைப்பீங்க நீங்க? கோபத்துடன் குரலை உயர்த்தினான் கேசவன்.
“பொறு கேசவா இனி என்னை மீறி எதுவும் நடக்க விட மாட்டேன்.அமைதியா இருடா ….”என்று பதில் சொன்னான் ராஜன்.
'இன்னொரு தடவை உன்னை நம்பி மோசம் போகணுமா நாங்க...? போடா…..’ என்று அவனை கோபத்துடன் பார்த்தாள் அன்னக்கொடி.
தொடரும்...........
Last edited:
Previous thread
Next thread