• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

3 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 32
  • Views Views 3K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
804
Reaction score
4,618
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம் - 3
View attachment 659
திலீப்பின் அழைப்பு வந்த சிறிது நேரத்தில் வேகமாக கொலை நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் பிரதாப். அவன் யோசனை எல்லாம் வருத்தத்துடன் கிளம்பிப் போன நைனிகாவைதான் சுற்றி வந்தது.

திருமணம் நிச்சயமாகி இத்தனை நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்க போன நேரத்தில் அவசரமாக கிளம்பும்படி ஆகிவிட்டதே என்று சங்கடமாக இருந்தது அவனுக்கு. அவளிடம் சிறிது நேரம் கூட நேரம் செலவிட முடியாமல் இப்படி குற்றங்கள் நடக்கும் இடங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

என்னதான் கடமை அழைத்த போதும் நைனிகாவின் நினைவு அவன் மனதை விட்டு அகலவில்லை என்பதுதான் உண்மை.

“கிளம்பலாம்” என்று அவன் சொன்னதும், அவள் முகத்தில் வந்துப் போன அதிர்ச்சி இப்போதும் அவன் கண்முன் வந்து சென்றது.

அவனைப் போலவே வேகமாக எழுந்து நின்றாள். அலைபேசியை அவசரமாக எடுத்து, “ஆட்டோ கிடைக்குதான்னு பார்க்கறேன்” என்றாள்.

“நான் ட்ராப் பண்றேன், வா” என்றான்.

“இல்லை, பரவாயில்லை. நான் ஆட்டோ புக் பண்ணிக்கிறேன். நீங்க கிளம்புங்க”

“நைனிகா..” அந்தக் குரலில் அலைபேசியிலிருந்து கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

“உன்னை சென்டர்ல ட்ராப் பண்றேன். நானும் அந்த ஏரியாக்குத்தான் வரணும். ம்ம், உன் ஸ்கூட்டி அங்கேதானே இருக்கு?” என்ற அவன் கேள்விக்கு தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.

'அப்போ நீங்களும் அந்த ஏரியாவுக்குத்தான் வர்றீங்க? அதுனாலதான் என்னை ட்ராப் பண்றேன்னு சொல்றீங்க. இல்லனா என்னை இப்படியே தனியா விட்டுட்டு போய்டுவீங்க. அப்படித்தானே?' அவளின் அகத்தினை முகம் காட்டிட, “பிளீஸ்” என்றான்.

“போலீஸுக்கு பிளீஸ் மட்டும் நல்லா வருது” என்று முணுமுணுத்தாள்.

பிரதாப் பட்டென நகர்ந்து வந்து, அவள் கைப் பிடித்தான்.

“சமயம் வரும் போது சும்மா சொல்லாம அதெல்லாம் நல்லா பிளீஸ் பண்ணுவேன்” என்று ரகசியமாக முணுமுணுத்து, “போகலாமா?” என்று சற்று சத்தமாகக் கேட்டான்.

“என்ன சொன்னீங்க?” அதிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.

“அதுலயும் சந்தேகமா டீச்சர்? எனக்கு பிளீஸ் பண்ண தெரியலைன்னா உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்”

“என்ன இப்படிப் பேசுறீங்க, போலீஸ்காரரே?”

“போலீஸ்னா பேசக்கூடாதா? எங்களுக்குத்தான் நிறைய சந்தேகம் வரும் டீச்சர். நீங்க சொல்லித் தர மாட்டீங்களா?”

“அடிச்சு சொல்லித் தர்றேன்” கேலியாக உதட்டை வளைத்தாள்.

“ஹேய், அது அஃபென்ஸ் நைனி”

“அவசர கால்னு கிளம்பிட்டு, கிளுகிளுப்பா பேசிட்டு இருக்கீங்க போலீஸ்காரரே… வாங்க போலாம்” என்று அவனையும் இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள் நைனிகா.

பிரதாப் சொன்னதுபோல அவளைப் பணியிடத்தில் இறக்கிவிட்டான்.

“வீட்டுக்குப் போய்ட்டு கால் பண்ணு நைனி, மறக்காத” என்று அக்கறையுடன் அவன் சொன்னதுதான் தவறாகிப் போனது.

“நான் கால் பண்ணுவேன் போலீஸ்காரரே. ஆனா, நீங்க எடுத்துட்டு வேலையா இருக்கேன், போனை வை! அப்புறமா நானே கூப்பிடுறேன்னு சொல்லி கட் பண்ணிட்டு திரும்ப கூப்பிடவே மாட்டீங்க. இப்போ கண்டிப்பா நான் கால் பண்ணணுமா?” என்று சூடாக கேட்டவளை அமைதியாக ஏறிட்டான்.

“என்ன, இதுக்கும் பிளீஸ் சொல்ல போறீங்களா?” அனல் தெறிக்க கேட்டாள்.

“இல்ல, டெய்லி உன் கூட வர்ற லேடி எங்கன்னு கேட்க வந்தேன்” பேச்சை மாற்றினான் லாவகமாக.

“ஹ்ம்ம், அவங்க இன்னைக்கு லீவ்” என்றாள், தன் வண்டியை இயக்கியபடி.

அவளின் வண்டியோடு அவள் கையைப் பிடித்து, “வீட்டுக்குப் போய்ட்டு கால் பண்ணு. நீ கோபமா இருக்கேன்னு தெரியுது. மெசேஜ் போடு, ஓகே?” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

“ஓகே. இன்னைக்கு மட்டுமில்ல, இனிமே டெய்லி கால் பண்ணுவேன். நீங்க எடுக்கறீங்க, என்னோட இரண்டு நிமிஷம் பேசுறீங்க.” என்றதோடு கிளம்பி விட்டாள்.

அதை யோசித்தபடியே குற்றம் நடந்த இடத்திற்கு வந்துவிட்டான் பிரதாப். பத்து நிமிட பயண தூரம்தான். இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தியவனை கண்டு கையசைத்தான் திலீப்.

அங்கே தற்கொலை செய்துக்கொண்ட பெண்ணின் வீட்டைச் சுற்றி நின்றிருந்த பக்கத்து வீட்டு மனிதர்களை எல்லாம் கூட்டம் சேரவிடாமல் அங்கிருந்து அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர் காவல்துறையினர்.

படுக்கையறை முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பிரதாப்.

தற்கொலை செய்துகொண்ட சுந்தரியின் அலைபேசி தரையில் சுக்குநூறாக சிதறிப்போய் கிடந்தது.

மணிக்கட்டிலிருந்து இரத்தம் சொட்ட இடக்கரம் வெளியே தொங்கியபடி இருக்க, படுக்கையில் கிடந்த பெண்ணை பிரதாப் பார்த்துக்கொண்டிருந்தபோது, தடயவியல் பிரிவிலிருந்து சாரங்கனும் அவன் ஆட்களும் வந்துவிட்டனர்.

“யார் உங்களுக்குத் தகவல் சொன்னது திலீப்? அவங்களை விசாரிச்சீங்களா?”

“ஆமா சார். இதோ இந்த சமையல்கார அம்மா தேவகிதான்.” என்று ஒரு ஐம்பது வயது பெண்ணை காட்டிய திலீப், “இவங்க பார்க்கும்போது உயிர் இருந்திருக்கு சார். இவங்க பதறி கத்தி அக்கம் பக்கத்து ஆளுங்க வந்து ஆம்புலன்ஸை கூப்பிட்டிருக்காங்க” என்றான்.

“பிரைவேட் ஆம்புலன்ஸா?”

“ஆமா சார். இதே ஏரியால இருக்கும் பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணியிருக்காங்க. அவங்க வந்து பார்த்தபோது உயிரில்லை சார்”

“அப்போ டைம் என்ன?”

“ஏழு நாப்பது சார்” என்றான் திலீப்.

முந்தைய இரு கொலைகளின் உயிர் போன நேரம் ஏழரை என்பது அந்நேரம் இருவரின் மனதிலும் வந்து போனது.

பிரதாப் முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தான் திலீப்.

“நீங்க எப்போ வந்தீங்க திலீப்?”

“ஆம்புலன்ஸ் கூப்பிடும் போதே ஒருத்தர் போலீஸுக்கும் போன் பண்ணிடுவோம்னு கால் பண்ணியிருக்கார் சார். நம்ம ஏரியா எஸ்ஐ சிவா வந்து பார்த்ததும் சந்தேகம் வந்து எனக்கு இன்பார்ம் பண்ணார்” என்றான்.

சாரங்கன் குழு மும்முரமாக வீட்டை ஆராய, இவர்கள் ஒதுங்கி நின்றார்கள். பிரதாபின் பார்வை அந்த அறையை துல்லியமாக அலசி கொண்டிருந்தது.

“இறந்தவங்க நாற்பது வயசு சுந்தரி. சிங்கிள் மதர். அக்கம் பக்கம் விசாரிச்சப்போ நல்ல மாதிரிதான் சொல்லுறாங்க சார்” தகவல் சொன்னான் திலீப்.

“நல்ல மாதிரி இருந்தவங்க எதுக்கு திடீர்னு தற்கொலை பண்ணிட்டாங்க?” கேட்டான் பிரதாப்.

“அது தான் தெரியலை சார். சூசைட் பண்ணிக்கணும்னு மணிக்கட்டை அறுத்துக்கிறவங்க எதுக்காக சார் கண்ணையும், வாயையும் கட்டிக்கணும்?” என்று சந்தேகம் கேட்டான் திலீப்.

“வினோதமான தற்கொலைதான். இந்த வீட்டுக்கு பின்வாசல் இருக்கா திலீப்? அது செக் பண்ணீங்களா? வாங்க பார்ப்போம்” என்று சொல்லி முன்னே நடந்தவன் மேலும் கேள்விகளைத் தொடர்ந்தான்.

“இவங்க தனியாத்தான் இருக்காங்களா? கூட வேற யாரும் இல்லையா? குழந்தைங்க?” என்று கேட்டான்.

“இங்கே சமையலுக்கு இருக்கிற அம்மா வீட்டை பார்த்திட்டு சுந்தரி கூடவே இருக்காங்க சார். ஹஸ்பண்ட் போய்ட்டாருன்னு சொல்லி அந்தம்மா அழுதாங்க. நான் விசாரிச்சப்போ அதுக்குமேல சரியான தகவல் சொல்லலை அவங்க” என்று தான் தெரிந்து கொண்ட தகவல்களை சொன்னான் திலீப்.

“சுந்தரிக்கு பசங்க?”

“ஒரு பொண்ணு சார். பத்தாவது படிக்கறாளாம். சனி ஞாயிறு லீவில் பாண்டிச்சேரில இருக்க அவங்க பாட்டி வீட்டுக்குப் போய் இருக்கா. இப்போ தகவல் சொன்னதும் வந்துட்டு இருக்காங்க” என்றான் திலீப்.

பேசிக்கொண்டே வேலைக்கார பெண்மணி அருகில் வந்தார்கள். அவரை விசாரித்தால் முன் பின் முரணாக பேசினார்.

“சாகுறா வயசா சார் இது? யார் வம்புக்கும் போகாத பொண்ணு சார். அக்கம் பக்கம் அதிகம் பேச்சு கூட வச்சுக்காது” என்றார் அழுகையில் மூக்கை உறிஞ்சி.

“சரி, நல்லா பொறுமையா யோசிச்சி என்ன நடந்ததுன்னு திரும்ப சொல்லுங்க” என்று கேட்டான் பிரதாப்.

“சுந்தரியம்மா துண்டுல எழுதின பொருளெல்லாம் வாங்கிட்டு வான்னு சொல்லி பக்கத்து கடைக்கு அனுப்பினாங்க. வந்து பார்த்தா கதவு திறந்து கிடக்கு. வீட்டில சத்தமே இல்லை. தேடிப் பார்த்தா இப்படி கிடக்குறா மகராசி. சாயந்தரம் நல்லா பேசிட்டு இருந்த பொண்ணு. என்னத்துக்கு இப்படி பண்ணுச்சுன்னு தெரியலையே…” என்று கதறினார்.

“அப்போ நீங்க வெளிய போயிருந்த நேரத்துல தான் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அப்படித்தானே?”
என்று திலீப் கேட்க,
“ஆமா சார்” பயந்தபடி பதில் சொன்னார் தேவகி.

“எதுக்குச் சரியா இந்த நேரம் வெளியே போனீங்க?”

“சொன்னேனே சார். வீட்டுக்கு கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வர சொன்னாங்கன்னு. வழமையா இப்படித்தான் போவேன் சார். வேலை எல்லாம் முடிச்சிட்டுத்தான் கடைக்கு அனுப்புவாங்க”

“சரி, புதுசா இன்னைக்கு யாரும் வீட்டுக்கு வந்திருந்தாங்களா?”

“இல்ல சார்”

“கடைக்குப் போனப்போ சந்தேகப்படுற மாதிரி இந்த ஏரியாவில் யாரையாவது பார்த்தீங்களா என்ன?” என்று கேட்டான் பிரதாப்.

“இல்ல சார். அப்படி யாரையும் பார்க்கல. இந்த ஏரியா எப்பவும் அமைதியாத்தான் இருக்கும். ஆனா, இன்னைக்குப் புதுசா இஸ்திரி வண்டி வந்து போச்சு சார்”

“அப்படியா?”

“ஆமா சார்”

“சரி, மேல் வீட்டில யாரு குடியிருக்காங்க?” என்று கேட்டான் வீட்டுக்கு வெளியே மேல் நோக்கி போகும் படிக்கட்டை பார்த்தபடி.

“ஒரு குடும்பம் இப்பதான் இரண்டு மாசமா குடியிருக்காங்க சார்”

“இப்ப எங்க போனாங்க கதவு பூட்டி இருக்கு?”

“சார், அந்த பேமிலி ரெண்டு நாளுக்கு முன்னாடி ஊர்ல கல்யாணம்னு கிளம்பிப் போய்ட்டாங்க. அவங்க டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன் சார்” என்று பதில் சொன்னான் திலீப்.

“இந்த பேமிலி ரெண்டு மாசமா இருக்காங்க சரி. அப்போ முன்னாடி யாரு குடியிருந்தாங்க?” விடாமல் கேட்டான் பிரதாப்.

“முன்னாடி குடியிருந்த பேமிலியோட ஹஸ்பண்ட் பிரைவேட் பேங்க்ல வேலை பார்த்திருக்கார். ஹவுஸ் வைஃப். அவங்களுக்குப் பத்தாவதும் ஆறாவதும் படிக்கிற இரண்டு பொண்ணுங்க. டிரான்ஸ்பர் கிடைச்சு மதுரைக்கு போயிருக்காங்க சார்” என்றான் திலீப்.

வேகமாக இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. வேலைக்காரப் பெண்ணை அனுப்பிவிட்டு இருவரும் அங்கே வந்தார்கள்.

“பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் மற்ற விஷயமெல்லாம் தெரிய வரும் சார்” என்றார், சாரங்கன் இறந்த உடலின் கையில் தெரிந்த நரம்பைப் பார்த்து கொண்டே. அதன் கீழே ரத்தம் சொட்டி சிறு குட்டையாகி இருந்தது. அந்தப் பெண்ணின் கையில் இருந்த மூன்று சிறிய பெரிய வெட்டுக் கீறல்களை கூர்ந்தன பிரதாபின் கண்கள்.

அப்போது காலில் ஏதோ தட்டுப்பட அதைக் குனிந்து எடுத்தான். மெல்ல நிமிர்ந்தவனின் கண்களில் அங்கிருந்த புகைப்படம் கண்ணில் பட, அதைத் திலீப்புக்கு கண் காட்டினான்.

அவன் பார்வையை உணர்ந்து, “அந்த வேலைக்கார அம்மாவை கேட்டா யார்னு சொல்வாங்க சார்” என்றான்.

இருவரும் தேவகியை அழைக்க, “சுந்தரி புருஷன் சார். இந்தா‌ள் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா…” என்று வாய் பொத்தி கதற தொடங்கியவரிடம் மேற்கொண்டு அவர்களால் விசாரிக்க முடியவில்லை.

அந்தப் புகைப்படத்தை கூர்ந்தான் பிரதாப். அந்த நடுத்தர வயது ஆணின் வலக்கரத்தில் இருந்த கைச் சங்கிலியில் அழுத்தமாக படிந்தன அவன் கண்கள்.

இதே போன்றதொரு கைச் சங்கிலியை இரண்டாம் கொலையான தம்பதியின் மருமகனும் அணிந்திருந்தது நினைவு வர, 'எப்படி எல்லோர் கையிலும் இதே போல டிசைன் வந்தது? ஒரே டேஸ்ட்டா?' என்ற சிந்தித்தவன், அதை தன் குறிப்பேட்டிலும் குறித்துக் கொண்டான்.

********
“அத்தை நல்லா இருக்கீங்களா?” என்று அலைபேசியில் கேட்டாள் நைனிகா.

“ஆமா, நல்லா இருக்கேன் ”

பிரதாப் சக்கரவர்த்தியின் அன்னை கோமளாவுக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தாள் நைனிகா.

பிரதாப்பின் தந்தை மகாலிங்கம் திருச்சியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்துகிறார்.

மூத்தவன் பிரதாப் சட்டத்துறையில் பட்டம் முடித்து, யுபிஎஸ்சி பரீட்சை எழுதியிருந்தான். அகில இந்திய அளவில் முதலிடம் தேர்ச்சி பெற்று, இப்போது ஏ.சி.பியாக பணிபுரிகிறான். அவன் தம்பி இப்போதுதான் கல்லூரி இறுதிவருடம் படிக்கிறான்.

“உங்கம்மா சாரதாகிட்ட இப்பதான் பேசினேன் நைனிகா. ஸ்கூல் லீவுக்கு திருச்சி வர்றதா சொல்லி இருக்கா தெரியுமா?”

“அத்தை, சாரதா டீச்சர் சொன்னா ஆச்சா? எங்கப்பா பழனிச்சாமி தன்னோட மதுரை மளிகை கடையை விட்டு கிளம்பணுமே?”

“அதெல்லாம் பழனிச்சாமி தன் பொண்டாட்டி சாரதா கேட்டால் என்ன வேணா பண்ணுவார்ன்னு ஊருக்கே தெரியுமே”

“ஆமா அத்தை, எங்கப்பா அம்மாவ பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கேன். இரண்டு பேரும் ரொம்ப குளோஸ். என் பொண்டாட்டி ஸ்கூல் போயிட்டு வந்து ஃப்ரீயா ரெஸ்ட் எடுக்கணும். நீ பாட்டி கூட போய் இருன்னு சொன்னவராச்சே அவர்”

“ஏன் பேச்சை மாத்துற நைனி? சென்னைல காலேஜ் படிக்க போறதா சொல்லி தாத்தா, பாட்டி கூட தங்கினவ தானே நீ. இப்ப உங்க அப்பா அம்மாவை குறை சொல்றியா?

“ஆனாலும் அத்தை, நீங்க உங்க ஹஸ்பண்ட்டோட பிரண்ட் பழனிச்சாமி குடும்பத்துக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்றீங்க” வருங்கால மாமியார் என்ற உரிமையில் சகஜமாக வாயாடினாள் நைனிகா.

“முன்ன எல்லாம் என் புருசனும் உங்கப்பாவும் எப்படி இருந்தாங்க தெரியுமா? இடையில கொஞ்சம் விட்டு போச்சு. இப்ப பிரெண்ட் பொண்ணே மருமகளா வர்றான்னு தலை கால் புரியலை உன் மாமாவுக்கு”

“அப்புறம்? என்று விளையாட்டாக கேட்டாள் நைனிகா.

“உனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் அவளையே சின்னவனுக்கு கட்டி வச்சிருக்கலாம். எங்க நீதான் ஒத்த புள்ளையா போயிட்டியே”

சின்ன வயதில் எப்போதும் இப்படி தான் கோமளாவிடம் ஒட்டிக் கொள்வாள் நைனிகா. அப்போது தேனியில் எல்லோரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியிருந்தனர். இப்போது திரும்ப திருமண பேச்சு வந்ததும், பழையபடி மாமியாருடன் சேர்ந்து அரட்டை அடிக்க தொடங்கி விட்டாள் நைனிகா.

தன் பெண்ணுக்கு கோமளாவே மாமியாராக வந்ததில் சாரதாவுக்கு அவ்வளவு சந்தோஷம்.

“எங்கப்பா அம்மா லவ் ஸ்டோரி எல்லாம் உங்க பையன்கிட்ட எதிர்பார்க்க முடியாது அத்தை. எப்ப பாரு முகத்துல முள்ளு வச்சு கட்டின போல தான் திரிவாரு. என்கிட்ட கொஞ்சம் சிரிச்சு பேச சொல்லி கொடுங்க”

“ஏன்டி, அவன் வேலை அப்படி. அதுக்குன்னு இப்படியா சொல்லுவ?”

“ஆனாலும், ரொம்பத்தான் பண்றாங்க உங்க புள்ள” என்றாள் எரிச்சலோடு.

“ஏன் அன்னைக்கு உன்னை விட்டுட்டு போனதுக்கு சாரி சொன்னானா என்ன?

“ஆமா, கால் பண்ணி போனா போகுதுன்னு சாரி மட்டும் சொல்லிட்டு வச்சிட்டார். என்ன புள்ள வளர்த்து வச்சிருக்கீங்க நீங்க?”

“அவனுக்கு ஆயிரத்திரத்தெட்டு டென்ஷன் நயனி. நீதான் புரிஞ்சு நடந்துக்கணும். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஏதோ வேலை டென்ஷன் விடேன்”

அது அவளுக்குப் புரிந்தே இருந்தது. ஆனாலும், மாமியாரை வம்பிழுத்துக்கொண்டிருந்தாள்.

“சரி, சரி… உங்க பிள்ளையைக் குறை சொல்லல. எனக்கு வேலைக்கு நேரமாச்சு வைக்கிறேன் அத்தை” என்று விடைபெற்று வேலைக்குக் கிளம்பினாள்.

சனிக்கிழமை மாலை மூன்று மணி. ”குட்வில் டியூஷன் சென்டர்” மாணவர்களின் வருகையால் நிறைந்திருந்தது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எல்லா பாடங்களுக்கும் அங்கே கற்பிக்கப்படுகிறது. தனித்தனி வகுப்பறைகளாக கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய கட்டிடத்தில்தான் டியூஷன் நடக்கும்.

இந்த டியூஷன் சென்டர் ஆங்கில ஆசிரியர் மனோகரின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. சென்னையில் இந்த டியூசன் சென்டருக்கு என்று தனி மரியாதை இருந்தது. அதனால் சுற்றியுள்ள ஏரியாவிலிருந்த பிள்ளைகள் எல்லோரும் இங்கேதான் சேர்ந்து கொள்வார்கள்.

நைனிகா பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்க, பக்கத்துக்கு வகுப்பில் அஞ்சலி பத்தாம் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தாள்.

இந்த டியூஷன் சென்டரில் நைனிகாவுக்கு நல்ல தோழி அஞ்சலி. தினம் வேலை முடிந்ததும் ஒன்றாகத்தான் வீடு செல்வார்கள். அஞ்சலியின் தெரு முனையில் அவளை இறக்கிவிட்டு தன் வீடு செல்வாள் நைனிகா.

அன்று டியூசன் சென்டரில் வேலை பார்க்கும் வேதியியல் ஆசிரியர் அவசர வேலை இருப்பதாக சொல்லி அனுமதி கேட்டுவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போவதை கோபத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான் மனோகர்.

டியூசன் சென்டரில் கற்பிக்கும் யாரும் அவசரத்துக்கு அனுமதி கேட்டாலோ விடுமுறை என்று வந்தாலோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இறுக்கமாகத்தான் பதில் சொல்லுவான் மனோகர்.

அன்று முழுவதும் அங்கிருக்கும் மற்றவர்களிடம் கத்தி தன் கோபத்தை தீர்த்துக் கொள்வான் அவன். அதனால் ஆசிரியர்கள் எல்லோரும் அவனைப் பற்றி தங்களுக்குள் கேலி செய்து சிரித்துக் கொள்வார்கள்.

அன்றைய வேலை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டாள் நைனிகா.

தாத்தா மாணிக்கம் பக்கத்து வீட்டு நண்பருடன் வராண்டாவில் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி காமாட்சி மகள் சாரதாவுடன் காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார்.

கைப்பேசியை எட்டி பார்த்து தாயை கண்டு மூக்கை சுளித்தாள் நைனி.

“எதுக்கு என் பொண்ணை பார்த்து மூக்கை சுளிக்கிற?” என்று கேட்டார் பாட்டி.

“அதுவாம்மா? கோமளா அண்ணிகிட்ட ஸ்கூல் லீவுக்கு திருச்சிக்கு வர்றோம்ன்னு சொல்லியிருந்தேன். ஏன் அதை அவள்கிட்ட சொல்லலைன்னு மேடத்துக்கு கோபம்” பதில் சொன்னார் சாரதா.

“இப்படி பண்ணாத நைனிம்மா… நாளைக்கு இதுதான் உன் மாமியார்கிட்டயும் வரும். என்னதான் கோமளா நல்லா பேசினாலும், சில சமயம் தனக்கு மரியாதை தரலைன்னு கூட நினைச்சுக்குவா. பார்த்து நடந்துக்கோ, சொல்லிட்டேன்.” என்றார் பாட்டி.

“நூற்றி பத்து” என்றாள் நைனிகா.

“என்னம்மா சொல்றா?” என்று சாரதா தாயிடம் கேட்டார்.

“அதுவா? உன் பொண்ணுக்கு இன்னைக்கு நூற்றி பத்து அட்வைஸ் சொல்லிட்டேனாம்”

சாரதா மகளை அதட்ட வாயைத் திறக்க, “ரொம்ப களைப்பா இருக்கு. சரி, நான் தூங்க போறேன் எல்லாருக்கும் குட் நைட்…” என்று சொல்லி அழைப்பில் இருந்த தாயிடமிருந்து தப்பித்து தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள் நைனிகா.

படுக்கையில் விழுந்த நைனிகா அலைபேசியை எடுத்து பிரதாபை அழைத்தாள். ஐந்தாவது அழைப்பில்தான் அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஹலோ”

இந்த நேரம் யார் அழைப்பது என்று பிரதாப்பிற்கு நன்றாகத் தெரியும்.

“சாரி, வேலையா இருக்கீங்களா? இனி நான் தூங்க போக முன்னாடி தினமும் ரெண்டு நிமிஷம் உங்ககிட்ட பேசிட்டு தான் தூங்க போவேன்னு ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன் தானே?”

“வேலை அது இருக்கும்தான். நீ சொல்லு” என்றான்.

“ஸாரி, வைக்கிறேன்” என்று சொல்லி உடனே விடைபெற போனாள்.

தன்னை அழைக்கும்போது அவள் குரலில் இருந்த துள்ளலையும், இப்போது வைக்கிறேன் என்று சொல்லும் குரலில் இருந்த வேறுபாட்டையும் கண்டு கொண்டான்.

“எனக்குக் கலகலன்னு பேச வராது நைனிகா. ஆனா, நீ சொன்னது போல தினமும் உன்கிட்ட ரெண்டு நிமிஷம் பேச முயற்சி பண்ணுறேன். இப்ப போய் தூங்கு, சரியா?” என்றான் தணிந்த குரலில்.

“பார்றா, இன்னைக்கு கொஞ்சம் நீளமா பேசிட்டீங்க போலீஸ்காரரே. நல்ல முன்னேற்றம்தான் போங்க. பார்ப்போம் நாளைக்கு எப்படி பேசுறீங்கன்னு. மறக்காமல் படுக்கிறப்போ நான் கொடுத்த டீ குடிச்சிட்டு தூங்குங்க”

“நீ குடுக்கற போதையை விடவா அந்த டீ குடுத்திட போகுது?”

“போதையா? அந்த டீயில கேஃபின் கிடையாதே. அப்புறம் எப்படி போதை” என்று கேட்டவளுக்கு, அவன் சொன்னதின் அர்த்தம் புரிய சில நொடிகள் ஆனது.

“டீச்சர் ரொம்ப ஸ்லோ பிக் அப் போல?” என்றான் உல்லாசமான சிரிப்புடன்.

“அதெல்லாம் நான் ரொம்ப ஷார்ப்” என்று ரோசமாக மறுத்தவள், “ஒழுங்கா நேரத்துக்கு தூங்குங்க” என்று அவனை மிரட்டினாள்.

“நீ பேசு நைனி. நான் அப்படியே தூங்கிடுறேன்” என்றான்.

“இன்னைக்கு..” என்று ஆரம்பித்து அவள் பேச, “ம்ம்ம்” கொட்டத் தொடங்கினான் காவல்துறை அதிகாரி. அவனின் சத்தம் குறையவும், “குட் நைட்” என்று முணுமுணுத்து அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் சாதாரணமாகப் பேசிவிட்டு வைக்கவும்தான், அவனுக்கு நிம்மதியாக தூக்கம் வந்தது.

‘எல்லா போலீஸ்காரன் பொண்டாட்டிக்கும் இதே நிலைதானா? இல்லை, எனக்கு மட்டும்தான் இப்படியா?’ என்ற யோசனையோடு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள் நைனிகா.

****

இரண்டாம் அத்தியாயம் எழுதிய ரைட்டர் யாருன்னு யாரும் இன்னும் கண்டுபிடிக்கலை மக்களே...

அதிலும் சிலர் ரெகுலரா படிப்பவங்களே கெஸ் பண்ண மாட்டிங்கிறீங்க 😀😀😀

மனசெல்லாம் புண்ணா போச்சாம் அந்த ரைட்டருக்கு! 😔😔😔

அந்த ரைட்டரை முதலாவதாக சரியா கண்டுபிடிப்பவங்களுக்கு அந்த ரைட்டரே சிறப்பு பரிசு எல்லாம் தர்றதா சொல்லியிருக்காங்க. ட்ரை பண்ணுங்க மக்களே 😀 😀 😀

அப்புறம் எல்லாப் பக்கமும் கலந்து போன எபிக்கு கெஸ் செய்தீங்க. மகிழ்ச்சி!

அப்படியே இந்த எபி எழுதிய ரைட்டர் யாரா இருக்கும்னு கெஸ் பண்ணுங்க.

உங்க பதிலைச் சொல்லுங்க. பரிசை வெல்லுங்க 😍😍😍
 
முன்னாடி கொலை நடந்த கேஸ் ல கெடச்சா செயின் மாதிரி இங்க யும் victim husband போட்டு இருக்குற மாதிரி இருக்கே அப்ப முன்னாடி murder நடந்தவங்களுக்கும் இவங்களுக்கும் அந்த கில்லர் க்கும் எதாவது connection இருக்குமோ

நைனிகா கொஞ்சம் ஜாலியான பொண்ணு போல

நமக்கு தெரிஞ்சதே சில writers மட்டும் தான்

பிரியா பாண்டீஸ்...
 
இப்போதைக்கு ப்ரேஸ்லட் தான் ஒரு சின்ன க்ளூவா தெரியுது...பிரதாப் எப்படி கண்டுபிடிக்க போறான்...இதுல வருங்கால பொண்டாட்டிய வேற சமாளிக்கனும்😄

எழுத்தாளர்கள் தன் பாணிய விட்டு எழுதுறாங்களோ...உண்மையிலயே கண்டுபிடிக்க முடியல 😪
 
SRI VINITHA
 
Ella murder vum inter related pola irrukae. Aduthu Manohar thaana. Neenga writer guess panna sonnenga naan murder guess panni irruken. Ennala mudinchidhu.
 
முன்னாடி கொலை நடந்த இடத்தில் கிடைத்த பிரேஸ்லெட்டும் இப்போ சுந்தரி கொலை நடந்த வீட்ல அவளோட ஹஸ்பண்ட் போட்டிருக்கும் பிரேஸ்லெட்டும் ஒரு மணி ஒரு மாதிரியா இருக்குன்னா அப்போ கொலையாளிக்கும் இவங்களுக்கு ஏதோ சம்பந்தம் இருக்குதா இல்ல கொலையாலேயே இந்த சுந்தரியோட ஹஸ்பண்ட் தானா?

நிச்சயமா ரைட்டர் யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடியல இந்த விளையாட்டுக்கு நான் வரல
 
இந்த கேஸ் ல அந்த பிரேஸ்லட் தான் க்லூ ..... எனக்கு அந்த மனோகர் மேல தான் டவுட் ஆ இருக்கு.... போன எபி ல நைனி டீ பாக்கெட் பிரதாப் , மனோகர் ரெண்டு பேருக்கும் கொடுத்தா தானே.... இவன் கேஸ கண்டுபிடிக்க தூக்கம் இல்லாம இருக்கான்... ஆனா அவன் எதுக்கு தூக்கம் இல்லாம இருக்கணும்?

க்ரைம் ஸ்டோரி வாசிச்சாலே எல்லார் மேலயும் சந்தேகம் வருது....🤪
soundharya cheliyan??
 
சரியா தெரியல ரைட்டர் யாருனு....

ஆன இது நிலா பிரகாஷ் ஆ இருக்க வாய்ப்பு இருக்கு.....

நையனி வெச்சி சொல்றேன்.....

இவங்களும் மகன்/ மகள் கூட இல்ல....

அந்த நிலா போட்ட பிரேஸ்லெட் தான் இருக்கு....

சுந்தரி கணவன் சரி இல்லையோ????

நயனி ஓட அப்பா அம்மாவும் இப்படி தானே இருக்காங்க????

அவங்களுக்கு இப்படி ஏதும் ஆகிடுமா?????
 
Rombe arumaiya iruku 3 epiyum but writers list iruntha maybe can choose the name 😉
 

Latest threads

Top Bottom