• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 2

நறுமுகை அந்த அறைக்குள் நுழைந்தபோது, அங்கே நிலவிய அமைதி அவளது கால்களைச் சற்றுத் தயங்கச் செய்தது. அந்த நிசப்தம் அவளுக்குள் ஒரு மெல்லிய நடுக்கத்தை விதைக்க, மெல்ல அடிமேல் அடி வைத்து தனக்காகக் காத்திருந்த இருக்கையை நோக்கிச் சென்றவளின் பார்வை, எதிரே இருந்த மேஜையின் மேல் விழுந்தது.

அங்கே நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கும் கோப்புகளுக்கும் நடுவே, 'டாக்டர் சகாயன், B.A.S.L.P' என்ற பெயர் பலகை பார்வையில் பட்டது.

அந்தப் பெயரைப் பார்த்ததுமே அவளுக்குள் பொறிதட்ட, 'சகாயன் என்றால் நண்பன் என்றுதானே அர்த்தம்? வானொலியில் நித்தமும் கேட்டு அவள் உருகும் அந்த மித்ரன் என்ற பெயருக்கும் அதே தோழன் என்பதுதானே பொருள்? பெயரில் இத்தனை ஒற்றுமையா? இல்லை இது வெறும் தற்செயலா? உலகில் ஒரே சாயலில் ஏழு பேர் இருப்பார்கள் என்பார்களே, அதுபோல குரலும் ஒரே மாதிரி இருக்குமா?' என அவளது உள்ளம் கேள்வி கேட்டுக் குடைந்துகொண்டிருந்தது.

தன் முன்னே அமர்ந்திருக்கும் மனிதனுக்கும், தன் காதுகளுக்குள் தினமும் ரீங்காரமிடும் அந்த குரலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற குழப்பத்தோடு, மெல்ல இருக்கையில் அமர்ந்தாள் நறுமுகை.

அவளது இதயம் மட்டும் அடங்க மறுத்து எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது. கைகளில் ஒரு மெல்லிய நடுக்கம் பரவத் தொடங்க, தன் உதட்டைக் கடித்துக்கொண்டு தன்னுடைய பதற்றத்தை அவன் கவனித்துவிடக் கூடாது என்பதில் நறுமுகை குறியாக இருந்தாள்.

தன் நிலையை அவனிடம் காட்டிக் கொள்ள விரும்பாமல், மேஜை மேல் அடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளையும் ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்வது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவளது பார்வை மேஜையின் மேல் இருந்ததே தவிர, கவனம் முழுவதும் எதிரே இருந்த சகாயன் பேனாவை எடுப்பதும், கோப்பைத் திறப்பதுமாகச் செய்யும் ஒவ்வொரு சிறு அசைவிலுமே நிலைத்திருந்தது.

சகாயன் அவளது முகத்தில் தெரிந்த படபடப்பைச் சட்டெனக் கண்டுகொண்டான். அவன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை விரிந்தது. மேஜையில் இருந்த கண்ணாடிக குவளையை எடுத்து, ஜாடியிலிருந்து மெல்லத் தண்ணீரை ஊற்றி அவளிடம் நீட்டியவன், "முதல்ல இதைக் கொஞ்சம் குடிங்க நறுமுகை... ரிலாக்ஸ்" என்றான்.

அதே குரல்! அதே பாணி! அவள் நடுங்கும் கைகளால் அந்தக் குவளையை வாங்கி, ஒரு மிடறு தண்ணீர் குடித்தாள். தண்ணீர் தொண்டையை நனைத்தாலும், மனதுக்குள் இருந்த அந்த ஆர்ஜே மித்ரன் பிம்பம் அவளைத் தவிக்கச் செய்து கொண்டிருந்தது.

சகாயன் தன் கையில் இருந்த பேனாவைச் சுழற்றியபடி அவளைப் பார்த்து, "இப்போ எப்படி இருக்கு? பயம் கொஞ்சம் குறைஞ்சதா? உங்க அக்கா வெளியவே உங்களை மிரட்டி அனுப்பிட்டாங்க போல" என்று அவன் இயல்பாகப் பேச்சைத் தொடங்கினான்.

"நா...ன்..." என்று அவள் இழுக்க, அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட வெளியே வரமாட்டேன் என்று அவளது தொண்டை பிடிவாதம் பிடித்தது. தான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் நறுமுகை பரிதாபமாக அவனைப் பார்க்க, அவளது தவிப்பைப் புரிந்துகொண்டவனாக ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தான்.

"ரிலாக்ஸ் நறுமுகை... இங்கே யாரும் உங்களை ஜட்ஜ் பண்ணப்போறது இல்லை. என்னை ஒரு டாக்டரா பார்க்காம, உங்க பிரண்டா நினைச்சுப் பேசுங்க. நாம இனிமே பிரண்ட்ஸ், ஓகேவா?" என்று சொன்னவன், தன் மேஜை டிராயரைத் திறந்து ஒரு டைரி மில்க் சாக்லேட்டை வெளியே எடுத்தான். அதை அவள் பக்கம் நீட்டி, "இதைப் பிடிங்க... இது நம்ம பிரண்ட்ஷிப்புக்கு ஒரு சின்ன ட்ரீட்" என்று நட்புக் கரத்தை நீட்டினான்.

அவனிடமிருந்து அந்தச் சாக்லேட்டை வாங்கிக் கொண்டவள், "தே.. ங் ஸ்..." எனத் திக்கியபடியே சொன்னாள். அவள் திக்கிச் சொன்ன அந்த ஒரு வார்த்தை கூட அவனுக்குள் ஏதோ ஒரு ராகத்தை இசைத்தது போலத் தோன்றியது. அவன் அவளை பார்த்தபடி, "உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு நறுமுகை... அதைத் திக்கித் திக்கித் தேடாதீங்க, இயல்பா வெளிய விடுங்க" என்றான்.

அவள் இயலாமையுடன் ஒருமுறை அவனை ஏறிட்டுப் பார்த்தாள். தன்னால் சரளமாகப் பேச முடியாது என்று தெரிந்தும் அவன் தன்னை வெளிப்படுத்தச் சொல்லிக் கேட்பது அவளுக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தாலும், அவனது குரலில் இருந்த அந்த அதிகாரம் கலந்த அக்கறை அவளைக் கட்டுப்படுத்தியது.

"சரி... இப்போதைக்கு நீங்க பேச வேண்டாம். ஆனா, உங்களைப் பத்தி எனக்குத் தெரியணும். நீங்க திக்கினாலும் பரவாயில்லை, ஆனா எல்லாத்தையும் நீங்களே தான் சொல்லி முடிக்கணும், சரியா?" என்றவன், ஒரு வெள்ளைத் தாளையும் பேனாவையும் அவளிடம் நீட்டினான். "இந்தாங்க... முதல்ல எதை எதைச் சொல்லணும்னு இதுல எழுதுங்க" என்றான்.

நறுமுகை மெல்லக் கைநீட்டி அந்தத் தாளையும் பேனாவையும் வாங்கிக் கொண்டாள். அவள் எழுதத் தொடங்கும் முன் அவன் மீண்டும் குறுக்கிட்டு, "ஒரு முக்கியமான விஷயம்... எனக்கு உங்க ஃபேமிலி டீடைல்ஸ் எதுவும் தேவையில்லை. உங்க அப்பா யாரு, அக்கா என்ன பண்றாங்கன்னு நான் தெரிஞ்சுக்கப் போறது இல்லை. எனக்கு உங்களைப் பற்றி மட்டும்தான் தெரியணும். அதாவது உங்க ஹாபி என்ன? உங்களுக்கு என்ன பிடிக்காது? எங்கே படிக்கிறீங்க? இதுல நீங்க மட்டும்தான் இருக்கணும். உங்க உலகத்தை எனக்குச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு, அவள் எழுதுவதைப் பார்க்காமல் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

அவன் அவளுக்குக் கொடுத்த அந்தத் தனிமை, நறுமுகையைச் சற்று ஆசுவாசப்படுத்தியது. பேனாவை விரல்களுக்கிடையில் அழுத்திப் பிடித்து, அந்த வெள்ளைத் தாளில் முதலில் தான் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், தான் ரசிக்கும் மழையைப் பற்றியும் எழுதத் தொடங்கியவளின் கை, பிடித்தவை என்ற இடத்திற்கு வந்ததும் ஒரு கணம் நின்றது.

சகாயன் இருக்கையை விட்டு எழும்பிப் போய், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை நறுமுகை கவனித்தாள். தன் கண்களால் அவனை ஒரு கணம் களவாடிவிட்டு, மீண்டும் தாளுக்குத் திரும்பினாள்.

அதில் ஆர்ஜே மித்ரனைப் பற்றி எழுதத் தொடங்கினாள். அவனது குரல் தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதையும், ஒவ்வொரு காலையும் அவனது பேச்சைக் கேட்காமல் தனக்கு விடியாது என்பதையும் வார்த்தைகளில் வடித்தாள்.

அடுத்ததாக, தன் தாய் தந்தைக்குத் தெரியாமல், மித்ரனுக்கு அவள் பலமுறை வாழ்த்து மடல்களை அவனது எஃப்.எம் அலுவலகத்திற்குத் தன் கைப்பட எழுதி அனுப்பியதையும், அந்த மடல்கள் அவனிடம் சேர்ந்ததா இல்லையா என்று தெரியாவிட்டாலும், அதை எழுதிய கணங்கள் தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தன என்பதை மிகவும் உருக்கமாக அந்தத் தாளில் பதிவிட்டாள்.

எல்லாம் எழுதி முடித்தபின் அந்தத் தாளைப் பார்த்தால், முக்கால்வாசிப் பக்கத்தை மித்ரனே ஆக்கிரமித்திருந்தான். அதை ஒருமுறை வாசித்துப் பார்த்தவளுக்குள் 'ஒருவேளை தன்னுடைய சந்தேகம் தவறாக இருந்து, இவன் அந்த மித்ரன் இல்லை என்றால்... தன்னைப் பற்றிச் சகாயன் என்ன நினைப்பான்?' என்ற பயம் அவளைத் திடுக்கிட வைத்தது.

யாரோ ஒரு ரேடியோ ஜாக்கிக்காக இவ்வளவு உருகுவதைப் பார்த்தால், ஒரு மருத்துவராக அவன் தன்னை ஏளனமாகப் பார்ப்பானோ என்று அவள் மனம் அஞ்சியது. உடனே, மித்ரனைப் பற்றி இப்போது அவனிடம் சொல்லத் தேவையில்லை எனத் திடமான முடிவெடுத்தாள் நறுமுகை. தன் மனதின் ரகசியங்களை மீண்டும் தனக்குள்ளேயே பூட்டி வைக்க முயன்றவள், அந்தத் தாளைத் தன் மார்போடு அணைத்தபடி, "எ... எழுதிட்டேன்" என்று திக்கியபடியே சொன்னாள்.

சகாயன் ஜன்னல் பக்கமிருந்து மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த அந்தத் திடீர் மாற்றமும், கைகளில் இருந்த அந்தத் தாளை அவள் மறைக்க முயல்வதும் அவன் கண்களுக்குத் தப்பவில்லை.
 
Last edited:
Previous thread
Next thread

Latest threads

Top Bottom